எஸ்தரின் சரித்திரம் 9:20-28

எஸ்தரின் சரித்திரம் 9:20-28 TAERV

மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான். எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர். அம்மெதாத்தாவின் குமாரனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது. ஆமான் அவற்றைச் செய்தான். ஆனால் எஸ்தர் ராஜாவிடம் பேசச் சென்றாள். எனவே, அவன் புதிய கட்டளைகளை அனுப்பினான். அந்த கட்டளைகள் ஆமானின் திட்டத்தை அழித்ததோடு, ஆமானுக்கும் அவனது குடும்பத்திற்கும், அதே தீமை ஏற்படும்படியும் ஆயிற்று. எனவே, ஆமானும் அவனது குமாரர்களும் தூக்கு மரத்தில் தொங்கினார்கள். இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர். இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும்.