எபேசியர் 4:2-15
எபேசியர் 4:2-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள். சமாதானத்தில் இணைந்து, ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும், ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே திருமுழுக்குமே உண்டு. ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர். கிறிஸ்து தாராளமாய் கொடுத்திருக்கிறதற்கு ஏற்றவாறு, நம்மில் ஒவ்வொருவரும் அவருடைய கிருபை வரத்தைப் பெற்றிருக்கிறோம். ஆதலால்: “அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது, தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார். அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா? கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார். கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார். கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது. இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது. அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம். மாறாக அன்புடனே உண்மையைப் பேசுகிறவர்களாய், எல்லாவகையிலும் நம் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடைவோம்.
எபேசியர் 4:2-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார்.
எபேசியர் 4:2-15 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஆவியின் மூலமாகச் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். இதே வழியில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவாருங்கள். சமாதானம் உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும். ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார். ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உள்ளன. எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர். நம்மில் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து ஒரு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார், கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் எதைக் கொடுக்க விரும்புகிறாரோ அதையே அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார். அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது. எனவே இயேசு இறங்கி வந்தார். பின் அவரே மேலேயும் சென்றார். அவர் எல்லா வானங்களுக்கும் மேலே ஏறிச் சென்றார். கிறிஸ்து தாமாகவே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக அப்படிச் செய்தார். அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலராக்கினார், சிலரை தீர்க்கதரிசிகளாக்கினார், சிலரை சுவிசேஷகர்களாக்கினார். சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாக்கினார், சிலரை போதிப்பவர்களாக்கினார். கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார். நாம் அனைவரும் அதே நம்பிக்கையில் ஒன்றுபட வேண்டும். தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவைப் பெறவேண்டி, அதுவரை இவ்வேலை தொடரவேண்டும். நாம் முழுமை பெற்றவர்களாக மாற வேண்டும். நாம் கிறிஸ்துவைப்போல் ஆகும் வரை வளர வேண்டும். அவரது முழுமையைப் பெற வேண்டும். நாம் இன்னும் குழந்தைகள் போல் இருப்பதை நிறுத்த வேண்டும். அலைகளால் அலைக்கழிக்கப்படும் கப்பலைப்போல சிலர் அடிக்கடி மனம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களைப் போன்று இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்மைத் தந்திரமாகச் சிக்கவைக்க சிலர் முயலும்போது நாம் அவர்கள் பின்னால் போகக் கூடாது. நாம் அன்புடன் உண்மையை மட்டும் பேசுவோம். எல்லா வழிகளிலும் நாம் இயேசுவைப் போன்று வளருவோம். கிறிஸ்து தலையும் நாம் சரீரமும் ஆவோம்.
எபேசியர் 4:2-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும் , ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.