எபே 4:2-15

எபே 4:2-15 IRVTAM

மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார்.