எபேசியருக்கு எழுதிய கடிதம் 4:2-15

எபேசியருக்கு எழுதிய கடிதம் 4:2-15 TAERV

எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஆவியின் மூலமாகச் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். இதே வழியில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவாருங்கள். சமாதானம் உங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும். ஒரே சரீரமும் ஒரே ஆவியும் தான் உள்ளது. ஒரே பொதுவான விசுவாசம்கொள்ள தேவன் உங்களை அழைக்கிறார். ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உள்ளன. எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர். நம்மில் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து ஒரு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார், கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் எதைக் கொடுக்க விரும்புகிறாரோ அதையே அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார். அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது. எனவே இயேசு இறங்கி வந்தார். பின் அவரே மேலேயும் சென்றார். அவர் எல்லா வானங்களுக்கும் மேலே ஏறிச் சென்றார். கிறிஸ்து தாமாகவே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக அப்படிச் செய்தார். அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலராக்கினார், சிலரை தீர்க்கதரிசிகளாக்கினார், சிலரை சுவிசேஷகர்களாக்கினார். சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாக்கினார், சிலரை போதிப்பவர்களாக்கினார். கிறிஸ்துவின் பரிசுத்தவான்களைச் சேவை செய்ய தேவன் பல வரங்களைக் கொடுத்தார். கிறிஸ்துவின் சபையானது வல்லமை பெறவே அவர் வரங்களைக் கொடுத்தார். நாம் அனைவரும் அதே நம்பிக்கையில் ஒன்றுபட வேண்டும். தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவைப் பெறவேண்டி, அதுவரை இவ்வேலை தொடரவேண்டும். நாம் முழுமை பெற்றவர்களாக மாற வேண்டும். நாம் கிறிஸ்துவைப்போல் ஆகும் வரை வளர வேண்டும். அவரது முழுமையைப் பெற வேண்டும். நாம் இன்னும் குழந்தைகள் போல் இருப்பதை நிறுத்த வேண்டும். அலைகளால் அலைக்கழிக்கப்படும் கப்பலைப்போல சிலர் அடிக்கடி மனம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களைப் போன்று இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்மைத் தந்திரமாகச் சிக்கவைக்க சிலர் முயலும்போது நாம் அவர்கள் பின்னால் போகக் கூடாது. நாம் அன்புடன் உண்மையை மட்டும் பேசுவோம். எல்லா வழிகளிலும் நாம் இயேசுவைப் போன்று வளருவோம். கிறிஸ்து தலையும் நாம் சரீரமும் ஆவோம்.