உபாகமம் 10:14-22

உபாகமம் 10:14-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்தேவன் அவரே. உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.

உபாகமம் 10:14-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே உரியவை. இருந்தும் யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் பாசம்கொண்டு, அவர்களில் அன்பு வைத்தார். அதனால் அவர்களுடைய சந்ததிகளாகிய உங்களை இன்று இருப்பதுபோல் எல்லா நாடுகளுக்கும் மேலாகத் தெரிந்துகொண்டார். ஆகவே உங்களுடைய இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள். இனிமேலும் வனங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்காதீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா தெய்வங்களுக்கெல்லாம் ஆண்டவராயும், மகத்துவமும், வல்லமையும், பயங்கரமுமான இறைவன், இலஞ்சம் வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் நியாயத்தை வழங்குபவர். அந்நியன்மேல் அன்புகூர்ந்து, அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர். நீங்கள் எகிப்தில் அந்நியராய் இருந்ததினால் அந்நியர்களிடம் அன்புகூருங்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருக்குப் பணிசெய்யுங்கள். அவரை உறுதியாய் பற்றிக்கொண்டு, அவருடைய பெயரிலேயே ஆணையிடுங்கள். அவரே உங்கள் புகழ்ச்சி; உங்கள் கண்களால் கண்ட மகத்துவமும் பயங்கரமான அதிசயங்களைச் செய்த உங்களுடைய இறைவன் அவரே. உங்கள் முற்பிதாக்கள் எழுபதுபேர்களாய் எகிப்திற்குப் போனார்கள், இப்பொழுதோ உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

உபாகமம் 10:14-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக. உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே. உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

உபாகமம் 10:14-22 பரிசுத்த பைபிள் (TAERV)

“எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள். “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். அவரைவிட்டு ஒரு போதும் விலகாதீர்கள். நீங்கள் எப்போது வாக்களித்தாலும் நமது தேவனுடயை நாமத்தை பயன்படுத்த வேண்டும். நீங்கள் நமது தேவனையே போற்றிப் புகழவேண்டும். கர்த்தரே உங்கள் தேவன். அவரே உங்கள் தேவன் முன்பு இந்த அற்புதங்களையும் மகத்துவங்களையும் உங்களுக்காச் செய்தார். நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் அவர் செய்த அனைத்தையும் பார்த்தீர்கள். உங்கள் முற்பிதாக்களில் எழுபது பேரே எகிப்திற்குள் சென்றார்கள். ஆனால் இன்றோ உங்கள் தேவனாகிய கர்த்தர் வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைப்போல் உங்களை மிகப்பெரிய ஜனங்கள் சமுதாயமாக உருவாக்கியுள்ளார்.