உபாகமம் 10
10
புதிய கற்பலகைகள்
1அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது, “முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி மலையின்மேல் என்னிடம் கொண்டுவா. அத்துடன் மரத்தினால் ஒரு பெட்டியையும் செய். 2நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை, நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன். நீ அவற்றை அந்த பெட்டிக்குள் வை” என்றார்.
3ஆகவே நான் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அவற்றை என் கைகளில் எடுத்துக்கொண்டு மலையின்மேல் ஏறிப்போனேன். 4யெகோவா தாம் முன்பு எழுதியவைகளை அக்கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் சபைக்கூடிய அந்த நாளில் மலையின்மேல் நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களுக்கு அறிவித்த பத்துகட்டளைகளை முன்பு செய்ததுபோலவே, அவர் அந்தக் கற்பலகைகளில் எழுதி என்னிடம் கொடுத்தார். 5பின்பு நான் மலையிலிருந்து இறங்கி, யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்த பெட்டிக்குள் கற்பலகைகளை வைத்தேன். அவை இப்பொழுதும் அங்கே இருக்கின்றன.
6பின்பு இஸ்ரயேலர் பெனெயாக்கானியரின் கிணறுகள் இருந்த இடத்திலிருந்து மோசெராவுக்குப் பிரயாணமாய்ப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டான். அவனுடைய மகன் எலெயாசார் அவனுடைய இடத்தில் ஆசாரியனானான். 7அவர்கள் அங்கேயிருந்து குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு அங்கிருந்து நீரோடைகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்குப் போனார்கள். 8அக்காலத்தில் லேவியர் இன்றுவரை செய்வதுபோலவே தொடர்ந்து யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கவும், யெகோவாவுக்குப் பணிசெய்யும்படி அவர்முன் நிற்கவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதத்தைக் கூறவும் யெகோவா லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். 9ஆகையால்தான், லேவியருக்கு அவர்களுடைய சகோதரரோடே பங்கோ, உரிமைச்சொத்தோ இல்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா சொன்னபடி யெகோவாவே லேவியரின் உரிமைச்சொத்து.
10நான் முதல்முறை செய்ததுபோலவே, இப்பொழுதும் மலையின்மேல் இரவும் பகலும் நாற்பது நாட்கள் தங்கினேன். யெகோவா இந்த முறையும் எனக்குச் செவிகொடுத்து, உங்களை அழிப்பது அவர் விருப்பமில்லை. 11யெகோவா என்னிடம், “நீ எழுந்து அவர்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நாட்டிற்குப்போய், அதை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி அவர்களை நீ வழிநடத்து” என்றார்.
யெகோவாவுக்குப் பயந்து நடத்தல்
12இப்பொழுதும் இஸ்ரயேலே, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடமிருந்து எதைக் கேட்கிறார்? நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கவேண்டும். அவரிடம் அன்பு செலுத்தி, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும். 13உங்களுடைய நன்மைக்காக இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் யெகோவாவினுடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதையே கேட்கிறார்.
14வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே உரியவை. 15இருந்தும் யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் பாசம்கொண்டு, அவர்களில் அன்பு வைத்தார். அதனால் அவர்களுடைய சந்ததிகளாகிய உங்களை இன்று இருப்பதுபோல் எல்லா நாடுகளுக்கும் மேலாகத் தெரிந்துகொண்டார். 16ஆகவே உங்களுடைய இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள். இனிமேலும் வனங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்காதீர்கள். 17உங்கள் இறைவனாகிய யெகோவா தெய்வங்களுக்கெல்லாம் ஆண்டவராயும், மகத்துவமும், வல்லமையும், பயங்கரமுமான இறைவன், இலஞ்சம் வாங்குவதும் இல்லை. 18அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் நியாயத்தை வழங்குபவர். அந்நியன்மேல் அன்புகூர்ந்து, அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர். 19நீங்கள் எகிப்தில் அந்நியராய் இருந்ததினால் அந்நியர்களிடம் அன்புகூருங்கள். 20நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருக்குப் பணிசெய்யுங்கள். அவரை உறுதியாய் பற்றிக்கொண்டு, அவருடைய பெயரிலேயே ஆணையிடுங்கள். 21அவரே உங்கள் புகழ்ச்சி; உங்கள் கண்களால் கண்ட மகத்துவமும் பயங்கரமான அதிசயங்களைச் செய்த உங்களுடைய இறைவன் அவரே. 22உங்கள் முற்பிதாக்கள் எழுபதுபேர்களாய் எகிப்திற்குப் போனார்கள், இப்பொழுதோ உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைப் போலாக்கினார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
உபாகமம் 10: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.