உபாகமம் 10:14-22

உபாகமம் 10:14-22 TAERV

“எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள். “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். அவரைவிட்டு ஒரு போதும் விலகாதீர்கள். நீங்கள் எப்போது வாக்களித்தாலும் நமது தேவனுடயை நாமத்தை பயன்படுத்த வேண்டும். நீங்கள் நமது தேவனையே போற்றிப் புகழவேண்டும். கர்த்தரே உங்கள் தேவன். அவரே உங்கள் தேவன் முன்பு இந்த அற்புதங்களையும் மகத்துவங்களையும் உங்களுக்காச் செய்தார். நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் அவர் செய்த அனைத்தையும் பார்த்தீர்கள். உங்கள் முற்பிதாக்களில் எழுபது பேரே எகிப்திற்குள் சென்றார்கள். ஆனால் இன்றோ உங்கள் தேவனாகிய கர்த்தர் வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைப்போல் உங்களை மிகப்பெரிய ஜனங்கள் சமுதாயமாக உருவாக்கியுள்ளார்.