அப்போஸ்தலர் 9:32-42
அப்போஸ்தலர் 9:32-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேதுரு நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கும்படி போனான். அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான். பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள். யோப்பாவிலே தபீத்தா என்னும் பெயருடைய சீஷி ஒருத்தி இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளைத் தொற்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்பொழுதும் நன்மை செய்கிறவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கிறவளாயும் இருந்தாள். அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது. லித்தா யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கிறான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது, இரண்டு மனிதரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாரும்” என்று சொல்லச் சொன்னார்கள். பேதுரு அவர்களுடனே போனான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். எல்லா விதவைகளும் அவனைச்சுற்றி நின்று அழுதார்கள். தொற்காள் தங்களுடன் உயிரோடு இருக்கையில் அவள் செய்த அங்கிகளையும் ஆடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள். பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவன் இறந்திருந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது, எழுந்து உட்கார்ந்தாள். பேதுரு அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் கூப்பிட்டு, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான். இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 9:32-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான். பேதுரு அவனைப் பார்த்து: “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்” என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டுவந்தாள். அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். யோப்பா பட்டணம் லித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். பேதுரு எழுந்து, அவர்களோடு போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லோரும் அழுது, தொற்காள் தங்களோடு இருந்தபோது செய்திருந்த அங்கிகளையும், மற்ற ஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். பேதுரு எல்லோரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான். இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
அப்போஸ்தலர் 9:32-42 பரிசுத்த பைபிள் (TAERV)
எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை அவன் சந்தித்தான். அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள். யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர். பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்! யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர்.
அப்போஸ்தலர் 9:32-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான். பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.