எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை அவன் சந்தித்தான். அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள். யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர். பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்! யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர்.
வாசிக்கவும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 9
கேளுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 9
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:32-42
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்