அப்போஸ்தலர் 9:32-42

அப்போஸ்தலர் 9:32-42 TCV

பேதுரு நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கும்படி போனான். அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான். பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள். யோப்பாவிலே தபீத்தா என்னும் பெயருடைய சீஷி ஒருத்தி இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளைத் தொற்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்பொழுதும் நன்மை செய்கிறவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கிறவளாயும் இருந்தாள். அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது. லித்தா யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கிறான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது, இரண்டு மனிதரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாரும்” என்று சொல்லச் சொன்னார்கள். பேதுரு அவர்களுடனே போனான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். எல்லா விதவைகளும் அவனைச்சுற்றி நின்று அழுதார்கள். தொற்காள் தங்களுடன் உயிரோடு இருக்கையில் அவள் செய்த அங்கிகளையும் ஆடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள். பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவன் இறந்திருந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது, எழுந்து உட்கார்ந்தாள். பேதுரு அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் கூப்பிட்டு, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான். இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்.