அப்போஸ்தலர் 3:1-10

அப்போஸ்தலர் 3:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான். பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான். அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான். அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன. அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான். அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது, இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.

அப்போஸ்தலர் 3:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள். அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள். அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான். பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது. அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான். அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு: ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.

அப்போஸ்தலர் 3:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். பிற்பகல் மூன்று மணியாகி இருந்தது. அது தினமும் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரமாகும். அவர்கள் தேவாலயத்தின் முற்றத்தில் போய்கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் அங்கிருந்தான். அவன் பிறந்தது முதல் ஊனமுற்றவனாக இருந்தான். அவனால் நடக்க முடியாததால் அவனது நண்பர்கள் சிலர் அவனைச் சுமந்து வந்தனர். அவனது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவனை தேவாலயத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊனமுற்ற மனிதனை தேவாலயத்துக்கு வெளியே ஒரு பெருங்கதவின் அருகே உட்கார வைத்தனர். அது அலங்கார வாசல் என அழைக்கப்பட்டது. தேவாலயத்துக்குள் போகும் அனைவரிடமும் அம்மனிதன் பணத்திற்காகப் பிச்சை கேட்டான். அன்றையத்தினம் அம்மனிதன் பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குள் போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம் பணத்திற்காக வேண்டினான். பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, “எங்களைப் பார்” என்றனர். அம்மனிதன் அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பணம் கொடுப்பார்களென அவன் எதிர்பார்த்தான். ஆனால் பேதுரு, “என்னிடம் வெள்ளியோ, பொன்னோ கிடையாது, ஆனால் உனக்குக் கொடுக்கக்கூடிய வேறு பொருள் என்னிடம் உள்ளது. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எழுந்து நட!” என்று கூறினான். பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன. அம்மனிதன் குதித்தெழுந்து, அவனது பாதங்களில் நின்று, நடக்க ஆரம்பித்தான். அவன் அவர்களோடு தேவாலயத்துக்குள் சென்றான். அம்மனிதன் நடந்துகொண்டும், குதித்துக்கொண்டும் தேவனை வாழ்த்தியவனாக இருந்தான். எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அப்போஸ்தலர் 3:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.