அப்போஸ்தலர் 3
3
3 அதிகாரம்
1ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
2அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
3தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான்.
4பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
5அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
6அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
7வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
8அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
9அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
10தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
11குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
12பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப்பார்க்கிறதென்ன?
13ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
14பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு,
15ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
16அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
17சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.
18கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.
19ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,
20உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
21உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
22மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக:
23அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.
24சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள்.
26அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
அப்போஸ்தலர் 3: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.