அப்போஸ்தலர் 3:1-10

அப்போஸ்தலர் 3:1-10 TCV

ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான். பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான். அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான். அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன. அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான். அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது, இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.