அப்போஸ்தலர் 21:1-17

அப்போஸ்தலர் 21:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம். அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம். நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது. அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள். ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம். பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம். மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன். அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள். அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான். நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம். இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான். நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

அப்போஸ்தலர் 21:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து, அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம். சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது. அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே சொன்னார்கள். அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப்போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு பட்டணத்திற்கு வெளியே எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம். அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள். நாங்கள் கப்பல் பயணத்தை முடித்து, தீரு பட்டணத்தைவிட்டு பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்து, சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம். மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்திற்கு வந்து, ஏழு நபர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்னும் நற்செய்தியாளர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினோம். தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம். அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான். அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம். அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம். செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள். நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.

அப்போஸ்தலர் 21:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம். சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர். தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது. பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான். நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான். பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம். இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர்.

அப்போஸ்தலர் 21:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து, அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம். சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது. அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள். அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம். ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள். நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தைவிட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம். மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்குவந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம். தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம். அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம். அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம். செசரியா பட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டுவந்தார்கள். நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.