நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம். அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம். நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது. அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள். ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம். பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம். மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன். அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.