அப் 21:1-17

அப் 21:1-17 IRVTAM

நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து, அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம். சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது. அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே சொன்னார்கள். அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப்போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு பட்டணத்திற்கு வெளியே எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம். அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள். நாங்கள் கப்பல் பயணத்தை முடித்து, தீரு பட்டணத்தைவிட்டு பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்து, சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம். மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்திற்கு வந்து, ஏழு நபர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்னும் நற்செய்தியாளர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினோம். தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம். அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான். அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம். அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம். செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள். நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.