2 சாமுவேல் 6:1-11

2 சாமுவேல் 6:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி, கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய், தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான். தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள். அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான். தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி, அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

2 சாமுவேல் 6:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான். கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள். இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான். தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான். ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான். யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது. தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான். எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான். யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார்.

2 சாமுவேல் 6:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி, கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய், தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான். தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான். அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான். தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவுடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி, அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். யெகோவாவுடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் இருக்கும்போது யெகோவா ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

2 சாமுவேல் 6:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் குமாரர்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான். கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர். நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான். ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான். கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை “பேரேஸ் ஊசா” என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது. தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, “நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?” என்றான். ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான். ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.