2 சாமுயேல் 6:1-11

2 சாமுயேல் 6:1-11 TCV

தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான். கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள். இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான். தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான். ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான். யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது. தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான். எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான். யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார்.

2 சாமுயேல் 6:1-11 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்