சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 6:1-11

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 6:1-11 TAERV

இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் குமாரர்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான். கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர். நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான். ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான். கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை “பேரேஸ் ஊசா” என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது. தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, “நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?” என்றான். ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான். ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 6:1-11 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்