2 சாமுவேல் 24:14-18

2 சாமுவேல் 24:14-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான். எனவே யெகோவா இஸ்ரயேலில் அன்று காலை தொடங்கி குறிக்கப்பட்ட நாட்கள் முடியும்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். இதனால் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள மக்களில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். தூதன் எருசலேமையும் அழிப்பதற்குத் தன் கையை ஓங்கியபோது அங்கே நடந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே அவர் மக்களை அழித்த தூதனிடம், “போதும் உன் கையை எடு” என்றார். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்தில் இருந்தார். யெகோவாவினுடைய தூதனானவர் மக்களைக் கொடிய கொள்ளைநோயினால் வாதிப்பதைத் தாவீது கண்டபோது, அவன் யெகோவாவிடம், “செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும்” என்றான். அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான்.

2 சாமுவேல் 24:14-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, யெகோவா அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் யெகோவாவுடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான். மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் யெகோவாவை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான். அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

2 சாமுவேல் 24:14-18 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான். எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர். தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனை கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான். ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான். அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான்.

2 சாமுவேல் 24:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப் போனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான். ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம் பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான். அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.