2 சாமு 24:14-18

2 சாமு 24:14-18 IRVTAM

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, யெகோவா அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் யெகோவாவுடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான். மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் யெகோவாவை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான். அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.