2 சாமுயேல் 24:14-18

2 சாமுயேல் 24:14-18 TCV

தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான். எனவே யெகோவா இஸ்ரயேலில் அன்று காலை தொடங்கி குறிக்கப்பட்ட நாட்கள் முடியும்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். இதனால் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள மக்களில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். தூதன் எருசலேமையும் அழிப்பதற்குத் தன் கையை ஓங்கியபோது அங்கே நடந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே அவர் மக்களை அழித்த தூதனிடம், “போதும் உன் கையை எடு” என்றார். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்தில் இருந்தார். யெகோவாவினுடைய தூதனானவர் மக்களைக் கொடிய கொள்ளைநோயினால் வாதிப்பதைத் தாவீது கண்டபோது, அவன் யெகோவாவிடம், “செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும்” என்றான். அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான்.