2 சாமுவேல் 19:1-8

2 சாமுவேல் 19:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“தாவீது அரசன் அப்சலோமுக்காக அழுது துக்கம்கொண்டாடுகிறான்” என யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் தன் மகனுக்காகத் துக்கங்கொண்டிருக்கிறான் என படைவீரர் கேள்விப்பட்டதால், அன்றையதினம் அந்த முழு படைக்கும் கிடைத்த வெற்றி துக்கமாய் மாறியது. போரிலிருந்து தப்பி ஓடுகிற படைவீரர் வெட்கத்துடன் இரகசியமாய் வருவதைப்போல், இந்த வீரர்கள் அன்றையதினம் பட்டணத்துக்குத் திரும்பினார்கள். அவ்வேளையில் அரசன் தன் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சத்தமிட்டு அழுதான். அப்பொழுது யோவாப் அரசனிடம் சென்று, “இன்று உம்முடைய உயிரையும், உமது மகன்களின், மகள்களின் உயிர்களையும், உமது மனைவிகளின், மறுமனையாட்டிகளின் உயிர்களையும் காப்பாற்றிய உம்முடைய வீரர்களையெல்லாம் சிறுமைப்படுத்தியிருக்கிறீரே! உம்மை வெறுக்கிறவர்களை நேசிக்கிறீர்; உம்மை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். படைத்தளபதிகளும், அவர்களுடைய வீரர்களும் உமக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று நீர் வெளிப்படையாகக் காட்டிவிட்டீர். இன்று நாங்களெல்லோரும் இறந்து, அப்சலோம் உயிரோடிருந்திருந்தால் அது உமக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் என எனக்குத் தெரிகிறது. இப்பொழுதும் நீர் வெளியே போய் உம்முடைய வீரர்களை உற்சாகப்படுத்தும். அப்படி நீர் செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவனும் இருக்கமாட்டானென்று யெகோவாமேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இது உம்முடைய இளமைப்பருவம் தொடங்கி இன்றுவரை உமக்கு நேரிட்ட எல்லா தீமைகளைப் பார்க்கிலும் அதிக மோசமாயிருக்கும்” என்றான். எனவே அரசன் எழுந்துபோய் பட்டண வாசலிலுள்ள தன் இருக்கையில் அமர்ந்தான். “அரசன் வாசலில் உட்கார்ந்திருக்கிறார்” என்று படைவீரருக்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அனைவரும் அவனுக்கு முன்பாக வந்தார்கள். இதற்கிடையில் இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்கு தப்பி ஓடிப்போனார்கள்.

2 சாமுவேல் 19:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது. யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள். ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான். அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவிடம் போய்: இன்று உம்முடைய உயிரையும், உம்முடைய மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகளின் உயிரையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் உயிரையும் பாதுகாத்த உம்முடைய போர்வீரர்கள் எல்லோருடைய முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களை நேசித்து, உம்மை நேசிக்கிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது. தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன். இப்போதும் எழுந்து வெளியே வந்து, உம்முடைய வீரர்களோடு அன்பாகப் பேசும்; நீர் வெளியே வராமலிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடு தங்கியிருப்பதில்லை என்று யெகோவாமேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நடந்த எல்லாத் தீமையைவிட, அது உமக்கு அதிகத் தீமையாக இருக்கும் என்றான். அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

2 சாமுவேல் 19:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் ராஜா அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “ராஜா தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று. ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். ராஜா முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது குமாரன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான். ராஜாவின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் ராஜாவைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் குமாரர்கள், குமாரத்திகள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான். அப்போது ராஜா நகரவாயிலுக்குச் சென்றான். ராஜா வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் ராஜாவைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.

2 சாமுவேல் 19:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று. யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள். ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான். அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்திலே போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது. அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன். இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான். அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.