2 சாமுயேல் 19:1-8

2 சாமுயேல் 19:1-8 TCV

“தாவீது அரசன் அப்சலோமுக்காக அழுது துக்கம்கொண்டாடுகிறான்” என யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் தன் மகனுக்காகத் துக்கங்கொண்டிருக்கிறான் என படைவீரர் கேள்விப்பட்டதால், அன்றையதினம் அந்த முழு படைக்கும் கிடைத்த வெற்றி துக்கமாய் மாறியது. போரிலிருந்து தப்பி ஓடுகிற படைவீரர் வெட்கத்துடன் இரகசியமாய் வருவதைப்போல், இந்த வீரர்கள் அன்றையதினம் பட்டணத்துக்குத் திரும்பினார்கள். அவ்வேளையில் அரசன் தன் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சத்தமிட்டு அழுதான். அப்பொழுது யோவாப் அரசனிடம் சென்று, “இன்று உம்முடைய உயிரையும், உமது மகன்களின், மகள்களின் உயிர்களையும், உமது மனைவிகளின், மறுமனையாட்டிகளின் உயிர்களையும் காப்பாற்றிய உம்முடைய வீரர்களையெல்லாம் சிறுமைப்படுத்தியிருக்கிறீரே! உம்மை வெறுக்கிறவர்களை நேசிக்கிறீர்; உம்மை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். படைத்தளபதிகளும், அவர்களுடைய வீரர்களும் உமக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று நீர் வெளிப்படையாகக் காட்டிவிட்டீர். இன்று நாங்களெல்லோரும் இறந்து, அப்சலோம் உயிரோடிருந்திருந்தால் அது உமக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் என எனக்குத் தெரிகிறது. இப்பொழுதும் நீர் வெளியே போய் உம்முடைய வீரர்களை உற்சாகப்படுத்தும். அப்படி நீர் செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவனும் இருக்கமாட்டானென்று யெகோவாமேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இது உம்முடைய இளமைப்பருவம் தொடங்கி இன்றுவரை உமக்கு நேரிட்ட எல்லா தீமைகளைப் பார்க்கிலும் அதிக மோசமாயிருக்கும்” என்றான். எனவே அரசன் எழுந்துபோய் பட்டண வாசலிலுள்ள தன் இருக்கையில் அமர்ந்தான். “அரசன் வாசலில் உட்கார்ந்திருக்கிறார்” என்று படைவீரருக்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அனைவரும் அவனுக்கு முன்பாக வந்தார்கள். இதற்கிடையில் இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்கு தப்பி ஓடிப்போனார்கள்.