2 சாமு 19:1-8

2 சாமு 19:1-8 IRVTAM

இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது. யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள். ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான். அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவிடம் போய்: இன்று உம்முடைய உயிரையும், உம்முடைய மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகளின் உயிரையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் உயிரையும் பாதுகாத்த உம்முடைய போர்வீரர்கள் எல்லோருடைய முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களை நேசித்து, உம்மை நேசிக்கிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது. தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன். இப்போதும் எழுந்து வெளியே வந்து, உம்முடைய வீரர்களோடு அன்பாகப் பேசும்; நீர் வெளியே வராமலிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடு தங்கியிருப்பதில்லை என்று யெகோவாமேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நடந்த எல்லாத் தீமையைவிட, அது உமக்கு அதிகத் தீமையாக இருக்கும் என்றான். அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.