2 சாமுவேல் 12:18-24

2 சாமுவேல் 12:18-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏழாம்நாள் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த செய்தியைத் தாவீதிற்கு அறிவிப்பதற்கு பணியாட்கள் பயந்தார்கள்; ஏனெனில், “பிள்ளை உயிரோடிருக்கையில் நாங்கள் சொன்னவற்றை அவர் கேட்கவில்லை; இப்பொழுது பிள்ளை இறந்துவிட்டது என எப்படிச் சொல்வோம்? சொன்னால் வீபரீதமான எதையாவது செய்துகொள்வாரே” என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். ஆனால் பணியாட்கள் தங்களுக்குள்ளே இரகசியமாய் பேசிக்கொள்கிறதை தாவீது கவனித்தபோது பிள்ளை இறந்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டான். அப்பொழுது அவன், “பிள்ளை இறந்து விட்டானா?” என்று தன் பணியாட்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், “ஆம் இறந்துவிட்டான்” என்றார்கள். உடனே தாவீது தரையில் இருந்து எழுந்து, குளித்துவிட்டு, எண்ணெய் பூசி தன் உடைகளையும் மாற்றிக் கொண்டான். பின்பு யெகோவாவின் ஆலயத்துக்குச் சென்று யெகோவாவை வழிபட்டான். அதன்பின் தன் சொந்த வீட்டிற்கு போய் உணவு கேட்டு அவர்களிடம் அதை வாங்கிச் சாப்பிட்டான். அப்பொழுது அவன் செய்வதைக் கண்ட பணியாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதுகொண்டிருந்தீர்; இப்பொழுது பிள்ளை இறந்தபோது எழுந்து சாப்பிடுகிறீரே?” என்றார்கள். அதற்கு அவன், “பிள்ளை உயிரோடிருந்தபோது, ஒருவேளை யெகோவா எனக்கு இரக்கங்காட்டிப் பிள்ளையை பிழைக்கப்பண்ணுவார் என நினைத்தே நான் உபவாசித்து அழுதுகொண்டிருந்தேன். இப்பொழுதோ பிள்ளை இறந்துவிட்டான்; எனவே இனி நான் ஏன் உபவாசிக்கவேண்டும்? என்னால் மறுபடியும் அவனைக் கொண்டுவர முடியுமா? நான் அவனிடம் போவேன்; அவனோ என்னிடம் திரும்பி வரமாட்டான்” என்றான். அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில் அன்புகூர்ந்தார்.

2 சாமுவேல் 12:18-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள். தாவீது தன்னுடைய வேலைக்காரர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, பிள்ளை இறந்துபோனது என்று அறிந்து, தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: பிள்ளை இறந்துபோனதோ என்று கேட்டான்; இறந்துபோனது என்றார்கள். அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, யெகோவாவுடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான். அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள். அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் யெகோவா எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான். பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

2 சாமுவேல் 12:18-24 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர். ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர். அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான். தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர். தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும்? கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான். பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார்.

2 சாமுவேல் 12:18-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள். தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக் கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள். அப்பொழுது தாவீது தரையை விட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போஜனம் கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான். அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள், அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான். பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்