சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:18-24

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:18-24 TAERV

ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர். ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர். அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான். தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர். தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும்? கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான். பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார்.

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:18-24 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்