2 சாமு 12:18-24

2 சாமு 12:18-24 IRVTAM

ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள். தாவீது தன்னுடைய வேலைக்காரர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, பிள்ளை இறந்துபோனது என்று அறிந்து, தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: பிள்ளை இறந்துபோனதோ என்று கேட்டான்; இறந்துபோனது என்றார்கள். அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, யெகோவாவுடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான். அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள். அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் யெகோவா எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான். பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

2 சாமு 12:18-24 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்