2 சாமுவேல் 12:1-14

2 சாமுவேல் 12:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து அவனிடம், “ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனுக்கு ஏராளமான ஆடுகளும், மாடுகளும் இருந்தன. ஏழைக்கோ தான் வாங்கி வளர்த்த ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லை. அது அவனோடும், அவன் பிள்ளைகளோடும் வளர்ந்தது; அது அவன் உணவை சாப்பிட்டு, அவன் பாத்திரத்தில் குடித்து, அவன் மடியில் நித்திரை செய்தது. அது அவனுடைய மகளைப்போல் இருந்தது. “இப்படியிருக்கையில் ஒரு நாள் அச்செல்வந்தனிடம் ஒரு வழிப்போக்கன் வந்தான்; அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயாரிப்பதற்குத் தன் மந்தையில் ஒரு செம்மறியாட்டையோ, மாட்டையோ அந்தச் செல்வந்தன் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த ஏழைக்குச் சொந்தமான செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்கு உணவு தயாரித்தான்” என்றான். இதைக் கேட்ட தாவீதிற்கு அந்த செல்வந்தன்மேல் கோபம் மூண்டது; எனவே தாவீது நாத்தானிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் அந்த மனிதன் சாகவே தகுதியுள்ளவன் என்பதும் நிச்சயம். அவன் இரக்கமில்லாமல் இப்படியான செயலைச் செய்தபடியால், அவன் அந்த செம்மறியாட்டுக் குட்டிக்காக நான்கு மடங்கு விலை கொடுக்கவேண்டும்” என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதிடம், “நீரே அந்த மனிதன். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் சவுலிடமிருந்து உன்னை விடுவித்து இஸ்ரயேலரின் அரசனாக உன்னை அபிஷேகம் பண்ணினேன். உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா? இப்படியிருக்க நீ யெகோவாவுக்கு அருவருப்பான செயலை செய்து அவருடைய வார்த்தைகளை ஏன் புறக்கணித்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக்கொன்று, அவன் மனைவியை உன் மனைவியாக்கினாய்; அம்மோனியரின் வாளால் நீதானே உரியாவை கொலைசெய்தாய். இப்படியாக நீ என்னை அவமதித்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்குச் சொந்தமாக எடுத்தபடியால் ஒருபோதும் உன் குடும்பத்தைவிட்டு வாள் நீங்காது.’ “மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான். நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்’ என்று சொல்கிறார்” என நாத்தான் சொன்னான். உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான். அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய். ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார்.

2 சாமுவேல் 12:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் தரித்திரன். செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது. தரித்திரனுக்கோ தான் விலைக்கு வாங்கி வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது; அது அவனோடும் அவனுடைய பிள்ளைகளோடும் இருந்து வளர்ந்து, அவனுடைய அப்பத்தை சாப்பிட்டு, அவனுடைய பாத்திரத்திலே குடித்து, அவனுடைய மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல்செய்ய, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனிதனுக்குச் சமையல்செய்யச் சொன்னான் என்றான். அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று யெகோவாவுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய பெண்களையும் உன்னுடைய மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கொடுத்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை செய்தது என்ன? ஏத்தியனான உரியாவை நீ பட்டயத்தால் இறக்கச்செய்து, அவனுடைய மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் இராணுவத்தினர்களின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். இப்போதும் நீ என்னை அசட்டைசெய்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியால், பட்டயம் எப்பொழுதும் உன்னுடைய வீட்டைவிட்டு நீங்காமலிருக்கும். யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான். அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, யெகோவா உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார். ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.

2 சாமுவேல் 12:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு குமாரத்தியைப் போல இருந்தது. “அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான். தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான். அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்.’ “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான். அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான். நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் குமாரன் மரிப்பான்” என்றான்.

2 சாமுவேல் 12:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான். அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான். அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார். ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்