சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:1-14

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:1-14 TAERV

கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு குமாரத்தியைப் போல இருந்தது. “அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான். தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான். அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்.’ “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான். அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான். நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் குமாரன் மரிப்பான்” என்றான்.

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:1-14 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்