2 சாமுயேல் 12:1-14

2 சாமுயேல் 12:1-14 TCV

யெகோவா நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து அவனிடம், “ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனுக்கு ஏராளமான ஆடுகளும், மாடுகளும் இருந்தன. ஏழைக்கோ தான் வாங்கி வளர்த்த ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லை. அது அவனோடும், அவன் பிள்ளைகளோடும் வளர்ந்தது; அது அவன் உணவை சாப்பிட்டு, அவன் பாத்திரத்தில் குடித்து, அவன் மடியில் நித்திரை செய்தது. அது அவனுடைய மகளைப்போல் இருந்தது. “இப்படியிருக்கையில் ஒரு நாள் அச்செல்வந்தனிடம் ஒரு வழிப்போக்கன் வந்தான்; அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயாரிப்பதற்குத் தன் மந்தையில் ஒரு செம்மறியாட்டையோ, மாட்டையோ அந்தச் செல்வந்தன் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த ஏழைக்குச் சொந்தமான செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்கு உணவு தயாரித்தான்” என்றான். இதைக் கேட்ட தாவீதிற்கு அந்த செல்வந்தன்மேல் கோபம் மூண்டது; எனவே தாவீது நாத்தானிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் அந்த மனிதன் சாகவே தகுதியுள்ளவன் என்பதும் நிச்சயம். அவன் இரக்கமில்லாமல் இப்படியான செயலைச் செய்தபடியால், அவன் அந்த செம்மறியாட்டுக் குட்டிக்காக நான்கு மடங்கு விலை கொடுக்கவேண்டும்” என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதிடம், “நீரே அந்த மனிதன். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் சவுலிடமிருந்து உன்னை விடுவித்து இஸ்ரயேலரின் அரசனாக உன்னை அபிஷேகம் பண்ணினேன். உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா? இப்படியிருக்க நீ யெகோவாவுக்கு அருவருப்பான செயலை செய்து அவருடைய வார்த்தைகளை ஏன் புறக்கணித்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக்கொன்று, அவன் மனைவியை உன் மனைவியாக்கினாய்; அம்மோனியரின் வாளால் நீதானே உரியாவை கொலைசெய்தாய். இப்படியாக நீ என்னை அவமதித்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்குச் சொந்தமாக எடுத்தபடியால் ஒருபோதும் உன் குடும்பத்தைவிட்டு வாள் நீங்காது.’ “மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான். நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்’ என்று சொல்கிறார்” என நாத்தான் சொன்னான். உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான். அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய். ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார்.

2 சாமுயேல் 12:1-14 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்