2 சாமுவேல் 1:17-27
2 சாமுவேல் 1:17-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்; யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “இஸ்ரயேலே, உன் மகிமை உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறது. வலிமைமிக்கவர்கள் எப்படி வீழ்ந்தார்கள்! “எனவே, இதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம். அஸ்கலோனின் வீதிகளில் பிரசித்தப்படுத்த வேண்டாம். இல்லையெனில், பெலிஸ்தரின் மகள்கள் மகிழ்ச்சியடைவார்கள், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் களிகூருவார்கள். “கில்போவா மலைகளே, பனியும், மழையும் உங்களுக்கு இல்லாமல் போவதாக. வயல்கள் தானிய காணிக்கைகளைக் கொடுக்காமல் போவதாக. அங்கு தானே வல்லவர்களின் கேடயம் கறைப்பட்டது. சவுலின் கேடயம் இனி ஒருபோதும் எண்ணெய் பூசப்படுவதில்லை. “கொலையுண்டவர்களின் இரத்தத்திலிருந்தும் வலியவரின் சதையிலிருந்தும் யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை. சவுலின் வாளும் திருப்தியடையாமல் திரும்பினதில்லை. வாழும்போது சவுலும் யோனத்தானும் அன்புக்குரியவர்களும், மதிப்புக்குரியவர்களுமாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரியவில்லை. அவர்கள் கழுகுகளைவிட வேகமாய் பறந்தார்கள். சிங்கங்களிலும் வலிமையுள்ளவர்களாய் இருந்தார்கள். “இஸ்ரயேலின் மகள்களே, சிவப்பு உடைகளை உடுத்துவித்தவருக்காக அழுங்கள். உங்கள் உடைகளைத் தங்க நகைகளால் அலங்கரித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். “போர்க்களத்தில் வலியவர்கள் விழுந்தார்களே! யோனத்தான் உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறான். என் சகோதரன் யோனத்தானே! உனக்காக நான் துக்கப்படுகிறேன்; நீ எனக்கு மிக அருமையானவனாய் இருந்தாய். நீ என்மேல் வைத்த அன்பு அற்புதமானது. பெண்களின் அன்பிலும் அது மேலானது. “வலியவர் எவ்வாறு வீழ்ந்தார்கள். யுத்த ஆயுதங்கள் அழிந்துவிட்டதே.”
2 சாமுவேல் 1:17-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான். (வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது. இஸ்ரவேலின் புகழ்பெற்ற தலைவர்கள், உயர்ந்த மலைகளில் இறந்து போனர்கள்; பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள். பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள். கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்; அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே. கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்காமலும், பெலசாலிகளின் கொழுப்பை சாப்பிடாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாகத் திரும்பினதில்லை. உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள். இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது. பெலசாலி வீரர்கள்கள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே” என்று பாடினான்.
2 சாமுவேல் 1:17-27 பரிசுத்த பைபிள் (TAERV)
சவுலையும் அவனது குமாரன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது. “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது. ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்! அச்செய்தியைக் காத் நகரில் கூறாதே, அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே. அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்! அந்த அந்நியர்கள் மகிழக்கூடும். மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன். அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன். வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன. சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை. வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான். வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல். இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்! வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர். “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர். மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை! அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள். அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள். இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்! இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்! “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான். சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன். உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு. போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”
2 சாமுவேல் 1:17-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின் பேரிலும், புலம்பல் பாடினான். (வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின புலம்பலாவது: இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள். பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத் பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள். கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவன்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே. கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை. உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள். இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டுபோனாயே. என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது. பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்து போயிற்றே, என்று பாடினான்.