சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 1:17-27

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 1:17-27 TAERV

சவுலையும் அவனது குமாரன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது. “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது. ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்! அச்செய்தியைக் காத் நகரில் கூறாதே, அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே. அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்! அந்த அந்நியர்கள் மகிழக்கூடும். மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன். அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன். வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன. சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை. வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான். வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல். இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்! வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர். “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர். மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை! அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள். அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள். இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்! இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்! “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான். சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன். உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு. போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”