2 சாமுயேல் 1:17-27

2 சாமுயேல் 1:17-27 TCV

தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்; யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “இஸ்ரயேலே, உன் மகிமை உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறது. வலிமைமிக்கவர்கள் எப்படி வீழ்ந்தார்கள்! “எனவே, இதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம். அஸ்கலோனின் வீதிகளில் பிரசித்தப்படுத்த வேண்டாம். இல்லையெனில், பெலிஸ்தரின் மகள்கள் மகிழ்ச்சியடைவார்கள், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் களிகூருவார்கள். “கில்போவா மலைகளே, பனியும், மழையும் உங்களுக்கு இல்லாமல் போவதாக. வயல்கள் தானிய காணிக்கைகளைக் கொடுக்காமல் போவதாக. அங்கு தானே வல்லவர்களின் கேடயம் கறைப்பட்டது. சவுலின் கேடயம் இனி ஒருபோதும் எண்ணெய் பூசப்படுவதில்லை. “கொலையுண்டவர்களின் இரத்தத்திலிருந்தும் வலியவரின் சதையிலிருந்தும் யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை. சவுலின் வாளும் திருப்தியடையாமல் திரும்பினதில்லை. வாழும்போது சவுலும் யோனத்தானும் அன்புக்குரியவர்களும், மதிப்புக்குரியவர்களுமாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரியவில்லை. அவர்கள் கழுகுகளைவிட வேகமாய் பறந்தார்கள். சிங்கங்களிலும் வலிமையுள்ளவர்களாய் இருந்தார்கள். “இஸ்ரயேலின் மகள்களே, சிவப்பு உடைகளை உடுத்துவித்தவருக்காக அழுங்கள். உங்கள் உடைகளைத் தங்க நகைகளால் அலங்கரித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். “போர்க்களத்தில் வலியவர்கள் விழுந்தார்களே! யோனத்தான் உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறான். என் சகோதரன் யோனத்தானே! உனக்காக நான் துக்கப்படுகிறேன்; நீ எனக்கு மிக அருமையானவனாய் இருந்தாய். நீ என்மேல் வைத்த அன்பு அற்புதமானது. பெண்களின் அன்பிலும் அது மேலானது. “வலியவர் எவ்வாறு வீழ்ந்தார்கள். யுத்த ஆயுதங்கள் அழிந்துவிட்டதே.”