2 பேதுரு 2:12-21
2 பேதுரு 2:12-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத விஷயங்களில் அவதூறாகப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதத் தன்மையற்ற மிருகங்களைப் போன்றவர்கள். தங்கள் இயல்பின்படியே நடக்கின்ற உயிரினங்களைப் போன்றவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கென்றே பிறந்திருக்கின்ற மிருகங்களைப்போலவே இவர்களும் அழிந்துபோவார்கள். தாங்கள் செய்த தீமைக்குப் பதிலாக, தீமையையே பெறுவார்கள். பகல் வேளையிலேயே மதுபான வெறியில் ஈடுபடுவதை இன்பம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்கிற அதேவேளையில், தங்கள் சிற்றின்பக் களியாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உங்கள் மத்தியில் அசிங்கமும், கறையுமாயிருக்கிறார்கள். இவர்களுடைய கண்கள் விபசாரத்தால் நிறைந்திருக்கின்றன. பாவம் செய்வதை இவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை; உறுதியற்றவர்களை இவர்கள் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்; இவர்கள் இருதயம் பேராசையில் தேர்ச்சி பெற்றது, இவர்கள் சபிக்கப்பட்ட கூட்டமே. இவர்கள் நேர்வழியை விட்டு விலகி, அநீதியை செய்து கூலியைப் பெற ஆசைப்பட்டவனான பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றும்படி போய்விட்டார்கள். ஆனால் பிலேயாமோ ஒரு கழுதையினாலே அவனுடைய தவறான செயலைக்குறித்து கடிந்துகொள்ளப்பட்டான். வாய்ப்பேசாத அந்த மிருகம் மனிதக் குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் மதிகேடான செயலைத் தடுத்து நிறுத்தியது. இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வீண் பெருமைகொண்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதனுடைய பாவ இயல்பிலிருந்து காமவேட்கையுள்ள ஆசைகளைத் தூண்டும் விதத்தில் பேசி, தவறான வழியில் வாழுகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயலும் மக்களைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாக்குப்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களோ, தாங்களே சீர்கெட்ட வாழ்க்கைக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் எதனால் ஒருவன் மேற்கொள்ளப்படுகிறானோ, அவன் அதற்கு அடிமையாக இருக்கிறான். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக, இவர்கள் உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பித்திருந்தும், மீண்டும் அதே சீர்கேட்டில் அகப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் அதனால் மேற்கொள்ளப்பட்டால், ஆரம்பத்தில் அவர்கள் இருந்த நிலைமையைவிட, முடிவில் அவர்கள் இருக்கும் நிலைமை மிக மோசமானது. இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறியாதிருந்திருந்தால், அது இவர்களுக்கு அதிக நலமாயிருந்திருக்கும். ஏனெனில், இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளைவிட்டுத் திரும்பிப் போனார்களே.
2 பேதுரு 2:12-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள். செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி, தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள். தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும். அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.
2 பேதுரு 2:12-21 பரிசுத்த பைபிள் (TAERV)
தாம் அறியாத விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இம்மக்கள் காரண காரியமின்றி வெறும் உந்துதலால் செயல்படும் மிருகங்களைப்போன்றவர்கள். பிடித்துக் கொல்லப்படுவதற்காகப் பிறக்கின்ற காட்டு மிருகங்களைப்போல இம்மக்களும் அழிக்கப்படுவார்கள். இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள். அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவேயாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச்சிகளிலேயே ஈடுபடுவார்கள். ஒரு பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவளை அடைய விரும்புகிறார்கள். இந்தத் தீய போதகர்கள் இந்த வகையில் எப்போதும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வலிமையற்ற மக்களைப் பாவ வலையில் சிக்கும்படியாகச் செய்கிறார்கள். அவர்கள் தம் இதயங்களுக்கு பேராசை கொள்ளும் பயிற்சியை அளித்திருக்கிறார்கள். அவர்கள் சாபம் பெற்றவர்கள். இந்தப் போலிப் போதகர்கள் சரியான வழியிலிருந்து விலகி, தவறான வழிக்குச் சென்றார்கள். அவர்கள் பிலேயாம் சென்ற வழியைப் பின்பற்றினார்கள். பிலேயாம் பேயோரின் குமாரன். தவறு செய்ய மக்கள் கொடுக்கும் கூலியை அவன் நேசித்தான். ஆனால் அவன் தவறு செய்வதிலிருந்து ஒரு கழுதை அவனைத் தடுத்தது. கழுதையோ பேச இயலாத ஒரு மிருகம். ஆனால் அந்தக் கழுதை மனித குரலில் பேசி அத்தீர்க்கதரிசியின் பைத்தியக்காரத்தனமான சிந்தனையைத் தடுத்தது. அந்தப் போலிப் போதகர்களோ நீரில்லாத ஊற்றுக்களைப் போன்றவர்கள். அவர்கள் புயலினால் அடித்துச் செல்லப்படுகின்ற மேகங்களைப் போன்றவர்கள். அவர்களுக்காகக் காரிருள் நிரம்பிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அது தகுதியற்றது. அவர்கள் மக்களைப் பாவ வலைக்குள் செலுத்துகிறார்கள். பாவங்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்க ஆரம்பித்திருக்கிறவர்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். தங்கள் பாவ சரீரங்களில் மக்கள் செய்ய விரும்பும் பொல்லாப்புகளைப் பயன்படுத்தி அப்போலிப் போதகர்கள் இதனைச் செய்கிறார்கள். போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான். உலகத்தின் தீமைகளிலிருந்து அம்மக்கள் தப்பித்து விட்டார்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததால் அவர்கள் தப்பித்தார்கள். மீண்டும் அத்தீமைகளிடையே அவர்கள் அகப்பட்டு பலியானால், அவர்களது இறுதி நிலமை, அவர்களுடைய முந்தைய நிலமையைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். ஆம், தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைப்பற்றி அறிந்து, அதன் பிறகு அதிலிருந்து பிறழ்வதைக் காட்டிலும் இத்தகைய மக்கள் சரியான வழியைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருப்பது நல்லதாகும்.
2 பேதுரு 2:12-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது, வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.