2 பேதுரு 2:12-21

2 பேதுரு 2:12-21 TCV

ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத விஷயங்களில் அவதூறாகப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதத் தன்மையற்ற மிருகங்களைப் போன்றவர்கள். தங்கள் இயல்பின்படியே நடக்கின்ற உயிரினங்களைப் போன்றவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கென்றே பிறந்திருக்கின்ற மிருகங்களைப்போலவே இவர்களும் அழிந்துபோவார்கள். தாங்கள் செய்த தீமைக்குப் பதிலாக, தீமையையே பெறுவார்கள். பகல் வேளையிலேயே மதுபான வெறியில் ஈடுபடுவதை இன்பம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்கிற அதேவேளையில், தங்கள் சிற்றின்பக் களியாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உங்கள் மத்தியில் அசிங்கமும், கறையுமாயிருக்கிறார்கள். இவர்களுடைய கண்கள் விபசாரத்தால் நிறைந்திருக்கின்றன. பாவம் செய்வதை இவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை; உறுதியற்றவர்களை இவர்கள் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்; இவர்கள் இருதயம் பேராசையில் தேர்ச்சி பெற்றது, இவர்கள் சபிக்கப்பட்ட கூட்டமே. இவர்கள் நேர்வழியை விட்டு விலகி, அநீதியை செய்து கூலியைப் பெற ஆசைப்பட்டவனான பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றும்படி போய்விட்டார்கள். ஆனால் பிலேயாமோ ஒரு கழுதையினாலே அவனுடைய தவறான செயலைக்குறித்து கடிந்துகொள்ளப்பட்டான். வாய்ப்பேசாத அந்த மிருகம் மனிதக் குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் மதிகேடான செயலைத் தடுத்து நிறுத்தியது. இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வீண் பெருமைகொண்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதனுடைய பாவ இயல்பிலிருந்து காமவேட்கையுள்ள ஆசைகளைத் தூண்டும் விதத்தில் பேசி, தவறான வழியில் வாழுகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயலும் மக்களைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாக்குப்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களோ, தாங்களே சீர்கெட்ட வாழ்க்கைக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் எதனால் ஒருவன் மேற்கொள்ளப்படுகிறானோ, அவன் அதற்கு அடிமையாக இருக்கிறான். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக, இவர்கள் உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பித்திருந்தும், மீண்டும் அதே சீர்கேட்டில் அகப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் அதனால் மேற்கொள்ளப்பட்டால், ஆரம்பத்தில் அவர்கள் இருந்த நிலைமையைவிட, முடிவில் அவர்கள் இருக்கும் நிலைமை மிக மோசமானது. இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறியாதிருந்திருந்தால், அது இவர்களுக்கு அதிக நலமாயிருந்திருக்கும். ஏனெனில், இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளைவிட்டுத் திரும்பிப் போனார்களே.