பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2:12-21

பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2:12-21 TAERV

தாம் அறியாத விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இம்மக்கள் காரண காரியமின்றி வெறும் உந்துதலால் செயல்படும் மிருகங்களைப்போன்றவர்கள். பிடித்துக் கொல்லப்படுவதற்காகப் பிறக்கின்ற காட்டு மிருகங்களைப்போல இம்மக்களும் அழிக்கப்படுவார்கள். இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள். அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவேயாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச்சிகளிலேயே ஈடுபடுவார்கள். ஒரு பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவளை அடைய விரும்புகிறார்கள். இந்தத் தீய போதகர்கள் இந்த வகையில் எப்போதும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வலிமையற்ற மக்களைப் பாவ வலையில் சிக்கும்படியாகச் செய்கிறார்கள். அவர்கள் தம் இதயங்களுக்கு பேராசை கொள்ளும் பயிற்சியை அளித்திருக்கிறார்கள். அவர்கள் சாபம் பெற்றவர்கள். இந்தப் போலிப் போதகர்கள் சரியான வழியிலிருந்து விலகி, தவறான வழிக்குச் சென்றார்கள். அவர்கள் பிலேயாம் சென்ற வழியைப் பின்பற்றினார்கள். பிலேயாம் பேயோரின் குமாரன். தவறு செய்ய மக்கள் கொடுக்கும் கூலியை அவன் நேசித்தான். ஆனால் அவன் தவறு செய்வதிலிருந்து ஒரு கழுதை அவனைத் தடுத்தது. கழுதையோ பேச இயலாத ஒரு மிருகம். ஆனால் அந்தக் கழுதை மனித குரலில் பேசி அத்தீர்க்கதரிசியின் பைத்தியக்காரத்தனமான சிந்தனையைத் தடுத்தது. அந்தப் போலிப் போதகர்களோ நீரில்லாத ஊற்றுக்களைப் போன்றவர்கள். அவர்கள் புயலினால் அடித்துச் செல்லப்படுகின்ற மேகங்களைப் போன்றவர்கள். அவர்களுக்காகக் காரிருள் நிரம்பிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அது தகுதியற்றது. அவர்கள் மக்களைப் பாவ வலைக்குள் செலுத்துகிறார்கள். பாவங்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்க ஆரம்பித்திருக்கிறவர்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். தங்கள் பாவ சரீரங்களில் மக்கள் செய்ய விரும்பும் பொல்லாப்புகளைப் பயன்படுத்தி அப்போலிப் போதகர்கள் இதனைச் செய்கிறார்கள். போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான். உலகத்தின் தீமைகளிலிருந்து அம்மக்கள் தப்பித்து விட்டார்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததால் அவர்கள் தப்பித்தார்கள். மீண்டும் அத்தீமைகளிடையே அவர்கள் அகப்பட்டு பலியானால், அவர்களது இறுதி நிலமை, அவர்களுடைய முந்தைய நிலமையைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். ஆம், தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைப்பற்றி அறிந்து, அதன் பிறகு அதிலிருந்து பிறழ்வதைக் காட்டிலும் இத்தகைய மக்கள் சரியான வழியைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருப்பது நல்லதாகும்.