2 இராஜாக்கள் 6:24-33

2 இராஜாக்கள் 6:24-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சில நாட்களுக்குப்பின்பு சீரிய அரசனான பெனாதாத் தன் முழுப் படைகளையும் திரட்டி அணிவகுத்துச்சென்று சமாரியாவை முற்றுகையிட்டான். அப்போது சமாரியாவில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முற்றுகை நெடுநாட்களுக்கு நீடித்தபடியால், ஒரு கழுதையின் தலை எண்பது சேக்கல் வெள்ளிக்கும் காற்படி புறாத்தீனி ஐந்து சேக்கல் வெள்ளிக்கும் விற்கப்பட்டது. இஸ்ரயேல் அரசன் ஒரு நாள் நகரத்தின் மதில்மேல் நடந்து போகும்போது ஒரு பெண் அவனைப் பார்த்து, “என் தலைவனாகிய அரசனே, எனக்கு உதவிசெய்யும்” என்று சத்தமிட்டுக் கெஞ்சினாள். அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான். பின்பும் அரசன் அவளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான். அதற்கு அவள் பதிலாக, “என்னோடிருக்கும் இப்பெண் என்னிடம், ‘இன்றைக்கு சாப்பிடும்படி உன் மகனைத் தா, நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம்’ என்று கூறினாள். அப்படியே நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அடுத்தநாள் நான் அவளிடம், ‘நாங்கள் சாப்பிடும்படி உன் மகனைத் தா’ என்று கேட்டேன். ஆனால் அவள் அவனை ஒளித்துவிட்டாள்” என்று முறையிட்டாள். அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அரசன் தன் மேலங்கியைக் கிழித்தான். அவன் மதிலுக்கு மேலாக நடந்து கொண்டுபோகும்போது அவனுடைய உள் உடை துக்கவுடையாய் இருப்பதை மக்கள் யாவரும் கண்டனர். அப்பொழுது அரசன், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் வெட்டாவிட்டால், இறைவன் என்னை எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்” என்றான். அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான். இவ்வாறு எலிசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தத் தூதுவன் அங்கு வந்தான். அப்போது அரசன், “இந்தப் பேராபத்து யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆகையால் இன்னும் நான் ஏன் யெகோவாவுக்குக் காத்திருக்கவேண்டும்” என்றான்.

2 இராஜாக்கள் 6:24-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான். அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள். இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள். அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள். அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள். அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள். அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான். எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான். அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 6:24-33 பரிசுத்த பைபிள் (TAERV)

இதற்குப் பிறகு, ஆராமிய ராஜாவாகிய பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான். வீரர்கள் நகருக்குள் உணவு வராதபடி தடுத்து விட்டனர். எனவே சமாரியாவில் பஞ்சமும் பட்டினியும் அதிகரித்தது. அங்கு ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுகளுக்கும், புறாக்களுக்குப் போடும் கால்படி புறா-புழுக்கை ஐந்து வெள்ளி காசுகளுக்கும் மிக மோசமாக விற்கப்பட்டன. ஒரு நாள் இஸ்ரவேல் ராஜா நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!” என்று சத்தமிட்டாள். அதற்கு ராஜா அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான் பிறகு ராஜா அவளிடம், “உனது பிரச்சனை என்ன?” என்றான். அதற்கு அவள், “நானும் அந்தப் பெண்ணும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என்னிடம் இவள், ‘நீ உன் குமாரனை தா. நாம் அவனைக் (கொன்று) தின்போம். பிறகு நான் என் குமாரனைத் தருவேன். அவனை நாளைத் தின்னலாம் என்றாள்.’ அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் தன் மகனை ஒளித்து வைத்திருக்கிறாள்!” என்றாள். ராஜா அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். ராஜா சுவர் வழியாகச் செல்லும்பொழுது, ராஜா தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது ராஜா துக்கமாயிருப்பதைக் காண்பித்தது. ராஜா எலிசாவின் மீது கோபங்கொண்டு, “சாப்பாத்தின் குமாரனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான். எலிசாவிடம் ராஜா ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் குமாரன் (இஸ்ரவேல் ராஜா) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக சென்று அவனை வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான். இவ்வாறு எலிசா மூப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே தூதுவன் வந்தான். அவன், “கர்த்தரிடமிருந்தே இந்த பிரச்சனை வந்துள்ளது. எதற்காக இனி கர்த்தருக்காக காத்திருக்கவேண்டும்?” எனக் கேட்டான்.

2 இராஜாக்கள் 6:24-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள். இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள். அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள். அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்து விட்டாள் என்றாள். அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள். அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான். எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான். அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.