ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:24-33

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:24-33 TAERV

இதற்குப் பிறகு, ஆராமிய ராஜாவாகிய பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான். வீரர்கள் நகருக்குள் உணவு வராதபடி தடுத்து விட்டனர். எனவே சமாரியாவில் பஞ்சமும் பட்டினியும் அதிகரித்தது. அங்கு ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுகளுக்கும், புறாக்களுக்குப் போடும் கால்படி புறா-புழுக்கை ஐந்து வெள்ளி காசுகளுக்கும் மிக மோசமாக விற்கப்பட்டன. ஒரு நாள் இஸ்ரவேல் ராஜா நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!” என்று சத்தமிட்டாள். அதற்கு ராஜா அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான் பிறகு ராஜா அவளிடம், “உனது பிரச்சனை என்ன?” என்றான். அதற்கு அவள், “நானும் அந்தப் பெண்ணும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என்னிடம் இவள், ‘நீ உன் குமாரனை தா. நாம் அவனைக் (கொன்று) தின்போம். பிறகு நான் என் குமாரனைத் தருவேன். அவனை நாளைத் தின்னலாம் என்றாள்.’ அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் தன் மகனை ஒளித்து வைத்திருக்கிறாள்!” என்றாள். ராஜா அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். ராஜா சுவர் வழியாகச் செல்லும்பொழுது, ராஜா தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது ராஜா துக்கமாயிருப்பதைக் காண்பித்தது. ராஜா எலிசாவின் மீது கோபங்கொண்டு, “சாப்பாத்தின் குமாரனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான். எலிசாவிடம் ராஜா ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் குமாரன் (இஸ்ரவேல் ராஜா) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக சென்று அவனை வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான். இவ்வாறு எலிசா மூப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே தூதுவன் வந்தான். அவன், “கர்த்தரிடமிருந்தே இந்த பிரச்சனை வந்துள்ளது. எதற்காக இனி கர்த்தருக்காக காத்திருக்கவேண்டும்?” எனக் கேட்டான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:24-33