2 இராஜாக்கள் 6:24-33

2 இராஜாக்கள் 6:24-33 TCV

சில நாட்களுக்குப்பின்பு சீரிய அரசனான பெனாதாத் தன் முழுப் படைகளையும் திரட்டி அணிவகுத்துச்சென்று சமாரியாவை முற்றுகையிட்டான். அப்போது சமாரியாவில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முற்றுகை நெடுநாட்களுக்கு நீடித்தபடியால், ஒரு கழுதையின் தலை எண்பது சேக்கல் வெள்ளிக்கும் காற்படி புறாத்தீனி ஐந்து சேக்கல் வெள்ளிக்கும் விற்கப்பட்டது. இஸ்ரயேல் அரசன் ஒரு நாள் நகரத்தின் மதில்மேல் நடந்து போகும்போது ஒரு பெண் அவனைப் பார்த்து, “என் தலைவனாகிய அரசனே, எனக்கு உதவிசெய்யும்” என்று சத்தமிட்டுக் கெஞ்சினாள். அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான். பின்பும் அரசன் அவளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான். அதற்கு அவள் பதிலாக, “என்னோடிருக்கும் இப்பெண் என்னிடம், ‘இன்றைக்கு சாப்பிடும்படி உன் மகனைத் தா, நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம்’ என்று கூறினாள். அப்படியே நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அடுத்தநாள் நான் அவளிடம், ‘நாங்கள் சாப்பிடும்படி உன் மகனைத் தா’ என்று கேட்டேன். ஆனால் அவள் அவனை ஒளித்துவிட்டாள்” என்று முறையிட்டாள். அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அரசன் தன் மேலங்கியைக் கிழித்தான். அவன் மதிலுக்கு மேலாக நடந்து கொண்டுபோகும்போது அவனுடைய உள் உடை துக்கவுடையாய் இருப்பதை மக்கள் யாவரும் கண்டனர். அப்பொழுது அரசன், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் வெட்டாவிட்டால், இறைவன் என்னை எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்” என்றான். அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான். இவ்வாறு எலிசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தத் தூதுவன் அங்கு வந்தான். அப்போது அரசன், “இந்தப் பேராபத்து யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆகையால் இன்னும் நான் ஏன் யெகோவாவுக்குக் காத்திருக்கவேண்டும்” என்றான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 இராஜாக்கள் 6:24-33