2 இராஜாக்கள் 17:14-23

2 இராஜாக்கள் 17:14-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடேபண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று. தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள். அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா கோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று. யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான். அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து, கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.

2 இராஜாக்கள் 17:14-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காத தங்கள் முற்பிதாக்களைப்போல பிடிவாதமுள்ளோராக இருந்தார்கள். யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கைக்கொள்ளும்படி எச்சரித்துக் கொடுத்த விதிமுறைகளையும், நியமங்களையும், அவர்களுடன் செய்த உடன்படிக்கையையும் அவர்கள் வெறுத்துத் தள்ளிவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, தாங்களும் பயனற்றவர்களானார்கள். யெகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டு, “நீங்கள் உங்களைச்சுற்றி வாழும் நாட்டினர் செய்வதுபோல் செய்யவேண்டாம்” என்று சொல்லியுங்கூட, அவர்கள் அதையே பின்பற்றினார்கள். யெகோவா செய்யவேண்டாமென்று விலக்கியவற்றையே அவர்கள் செய்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும்விட்டு, தங்களுக்கு வார்க்கப்பட்ட உலோகத்தால் இரண்டு கன்றுக்குட்டிகளின் உருவத்தில் விக்கிரகங்களையும், அசேரா விக்கிரக தூணையும் செய்தார்கள். எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் வணங்கி, பாகாலையும் வழிபட்டார்கள். தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில் பலியிட்டார்கள். குறிகேட்டு சகுனம் பார்த்தல், மாயவித்தை முதலிய வழக்கங்களில் ஈடுபட்டு, யெகோவாவின் பார்வையில் தீய செயல்களைச் செய்வதற்குத் தங்களை விற்று யெகோவாவைக் கோபமூட்டினார்கள். இதனால் யெகோவா இஸ்ரயேலரில் அதிக கோபங்கொண்டு தமது சமுகத்திலிருந்து அவர்களை அகற்றிவிட்டார். யூதா கோத்திரம் மட்டுமே மீதியாயிருந்தது. யூதாவுங்கூட தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் இஸ்ரயேலர் அறிமுகப்படுத்திய நடைமுறைகளைப் பின்பற்றினர். இதனால் யெகோவா இஸ்ரயேலர் அனைவரையும் வெறுத்துத் தள்ளினார். அவர்களை அவர் துன்பத்துக்குள்ளாக்கி, தமது சமுகத்திலிருந்து முழுவதுமாகத் துரத்துண்டு போகும்வரையும் கொள்ளையிடுபவர்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். தாவீதின் வம்சத்திலிருந்து யெகோவா இஸ்ரயேலரை அகற்றியதும், அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை தங்களுக்கு அரசனாக்கினார்கள். யெரொபெயாமோ இஸ்ரயேலை யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து வழிவிலகச் செய்து அவர்களைப் பெரும்பாவமொன்றைச் செய்யவும் தூண்டினான். இஸ்ரயேலர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களையும் தொடர்ந்து செய்தார்கள். அவற்றைவிட்டு விலகவில்லை. யெகோவா தமது பணியாளர்களான இறைவாக்கினர்மூலம் எச்சரித்திருந்தபடியே, அவர்களைத் தமது முன்னிருந்து நீக்கிப்போடும்வரை அவர்கள் இவற்றைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இன்றும் அங்கேயே இருக்கிறார்கள்.

2 இராஜாக்கள் 17:14-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் முன்னோர்களோடுசெய்த அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு மிக உறுதியாகக் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த மக்களுக்குப் பின்சென்று, தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள். அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள். ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது. யூதா மக்களும் தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேலர்கள் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் யெகோவாவைவிட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும் செய்தான். அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து, யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளைவிட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.

2 இராஜாக்கள் 17:14-23 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது. ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற்கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர். நெருப்பில் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள். எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை. யூத ஜனங்களும் கூட தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே வாழ்ந்தனர். இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் அனைவரையும் கர்த்தர் விலக்கினார். அவர்களுக்கு நிறைய துன்பங்களைக் கொடுத்தார். அவர்களது எதிரிகளால் அவர்களை அழியவிட்டார். இறுதியில், தமது பார்வையில் இருந்து தூர விலக்கினார். கர்த்தர் இஸ்ரவேலை தாவீதின் (வீட்டைவிட்டுப்) குடும்பத்தை விட்டுப் பிரித்தார், நேபாத்தின் குமாரனான யெரொபெயாமை இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கினர். அப்போது அவன் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு விலகவும் பெரும்பாவங்கள் செய்யவும் வைத்துவிட்டான். எனவே இஸ்ரவேலர் யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.