2 இராஜா 17
17
அத்தியாயம் 17
இஸ்ரவேலின் கடைசி ராஜாவாகிய ஓசெயா
1யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருட ஆட்சியில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து, 2யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை. 3அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனுக்குக் கீழிருந்து, அவனுக்கு வரி செலுத்தினான். 4ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பினதும், தனக்கு வருடந்தோறும் செய்ததுபோல், வரி செலுத்தாமல் போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான். 5அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருடங்கள் முற்றுகையிட்டிருந்தான். 6ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
பாவத்திற்காக இஸ்ரவேல் சிறையாகக் கொண்டுசெல்லப்படுதல்
7எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இஸ்ரவேல் மக்கள் பாவம்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, 8யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள். 9செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்வரையுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி, 10உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி, 11யெகோவா தங்களை விட்டுக் குடிவிலக்கின மக்களைப்போல, சகல மேடைகளிலும் தூபம்காட்டி, யெகோவாவுக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து, 12இப்படிச் செய்யத்தகாது என்று யெகோவா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள். 13நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று யெகோவா தீர்க்கதரிசிகள், தரிசனம் காண்கிறவர்கள் எல்லோரையும்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் மிக உறுதியாக எச்சரித்துக்கொண்டிருந்தும், 14அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, 15அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் முன்னோர்களோடுசெய்த அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு மிக உறுதியாகக் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த மக்களுக்குப் பின்சென்று, 16தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள். 17அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள். 18ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது. 19யூதா மக்களும் தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். 20ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். 21இஸ்ரவேலர்கள் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் யெகோவாவைவிட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும் செய்தான். 22அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து, 23யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளைவிட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
சமாரியா மீண்டும் குடியேற்றப்படுதல்
24அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனிதர்களை வரச்செய்து, அவர்களை இஸ்ரவேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாகக் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். 25அவர்கள் அங்கே குடியேறினது முதல், யெகோவாவுக்குப் பயப்படாததால், யெகோவா அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது. 26அப்பொழுது மக்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேறச்செய்த மக்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாததால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள். 27அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். 28அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, யெகோவாவுக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். 29ஆனாலும் அந்தந்த மக்கள் தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டாக்கி, அந்தந்த மக்கள் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர்கள் உண்டாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். 30பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும், 31ஆவியர்கள் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர்கள் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் சுட்டெரித்து வந்தார்கள். 32அவர்கள் யெகோவாவுக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் இழிவானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். 33அப்படியே யெகோவாவுக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள். 34இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், யெகோவா இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபின் மக்களுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தவிதமாகிலும் செய்கிறதுமில்லை. 35யெகோவா இவர்களோடு உடன்படிக்கைசெய்து, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், வணங்காமலும், அவர்களுக்குப் பலியிடாமலும், 36உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவாவுக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு, 37அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்கள், முறைமைகள், நியாயப்பிரமாணம், கற்பனைகள் ஆகியவற்றை நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள். 38நான் உங்களோடே செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், 39உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்களுடைய எல்லா எதிரிகளின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். 40ஆனாலும் அவர்கள் அவைகளைக் கேட்காமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள். 41அப்படியே அந்த மக்கள் யெகோவாவுக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 இராஜா 17: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.