2 இராஜா 18
18
அத்தியாயம் 18
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
1இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான். 2அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி. 3அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 4அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான்#18:4 வெண்கல சர்ப்பம் என்று பெயரிட்டான். 5அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 6அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். 7ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். 8அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான். 9இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருட ஆட்சியில் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான். 10மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியிலும் சமாரியா பிடிபட்டது. 11அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 12அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் யெகோவாவின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள். 13யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான். 14அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான். 15ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். 16அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா யெகோவாவுடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான்.
சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்துதல்
17ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று, 18ராஜாவை வரவழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்காளனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 19ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? 20போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 21இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான். 22நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே. 23நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய். 24செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய வேலைக்காரர்களில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரர்களும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்? 25இப்போதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னாரே என்றான். 26அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியார்களோடு சீரியமொழியிலே பேசும், அந்த மொழி எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களோடே எபிரேய மொழியிலே பேசவேண்டாம் என்றார்கள். 27அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி, 28ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 29எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான். 30யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார். 31எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும், 32அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும் தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாக நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; யெகோவா நம்மைத் தப்புவிப்பார் என்று எசேக்கியா உங்களுக்குப் போதிக்கும்போது அதைக் கேட்காதிருங்கள். 33மக்களுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? 34ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ? 35யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான். 36ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்திரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். 37அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகன் யோவாக் என்னும் கணக்காளனும் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 இராஜா 18: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.