2 இராஜா 19
19
அத்தியாயம் 19
எருசலேமின் விடுதலை முன்னறிவிக்கப்படுதல்
1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல் ஆடையை அணிந்துகொண்டு, யெகோவவுடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல் ஆடையை அணிந்துகொண்டவர்களாக அனுப்பினான். 3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை. 4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். 5இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர்கள் ஏசாயாவிடம் வந்து சொன்னார்கள். 6அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். 7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான். 8அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான். 9இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: 10நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. 11இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? 12என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ? 13ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாக்களும் எங்கே என்று சொல்லுங்கள் என்றான்.
எசேக்கியாவின் ஜெபம்
14எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, 15யெகோவாவை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். 16யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். 17யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த மக்களையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, 18அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள். 19இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவனாகிய யெகோவா என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான்.
சனகெரிப்பின் தோல்வியைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனம்
20அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கிச் செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். 21அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது:
“சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து,
உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி
உன் பின்னாலே தலையை அசைக்கிறாள்.
22“யாரை அவமதித்து தூஷித்தாய்?
யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ
உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்?
23உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து:
என் இரதங்களின் திரளினாலே
நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்;
அதின் உயரமான கேதுருமரங்களையும்,
உச்சிதமான தேவதாரு மரங்களையும் நான் வெட்டி,
அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,
24நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்;
என் உள்ளங்கால்களினால்
பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.
25நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி,
ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ?
இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப்
பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.
26அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து,
கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும்,
பச்சிலைக்கும்,
வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.
27உன் உட்காருதலையும், போக்கையும்,
வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
28நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து,
வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால்,
நான் என் கொக்கியை உன் மூக்கிலும்
என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு,
நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று
அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”
29உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களை சாப்பிடுவீர்கள். 30யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 31மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும். 32ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை. 33அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். 34என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 35அன்று இரவில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் முகாமில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள். 36அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். 37அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகன்களாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 இராஜா 19: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.