2 இராஜாக்கள் 17:14-23

2 இராஜாக்கள் 17:14-23 TCV

ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காத தங்கள் முற்பிதாக்களைப்போல பிடிவாதமுள்ளோராக இருந்தார்கள். யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கைக்கொள்ளும்படி எச்சரித்துக் கொடுத்த விதிமுறைகளையும், நியமங்களையும், அவர்களுடன் செய்த உடன்படிக்கையையும் அவர்கள் வெறுத்துத் தள்ளிவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, தாங்களும் பயனற்றவர்களானார்கள். யெகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டு, “நீங்கள் உங்களைச்சுற்றி வாழும் நாட்டினர் செய்வதுபோல் செய்யவேண்டாம்” என்று சொல்லியுங்கூட, அவர்கள் அதையே பின்பற்றினார்கள். யெகோவா செய்யவேண்டாமென்று விலக்கியவற்றையே அவர்கள் செய்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும்விட்டு, தங்களுக்கு வார்க்கப்பட்ட உலோகத்தால் இரண்டு கன்றுக்குட்டிகளின் உருவத்தில் விக்கிரகங்களையும், அசேரா விக்கிரக தூணையும் செய்தார்கள். எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் வணங்கி, பாகாலையும் வழிபட்டார்கள். தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில் பலியிட்டார்கள். குறிகேட்டு சகுனம் பார்த்தல், மாயவித்தை முதலிய வழக்கங்களில் ஈடுபட்டு, யெகோவாவின் பார்வையில் தீய செயல்களைச் செய்வதற்குத் தங்களை விற்று யெகோவாவைக் கோபமூட்டினார்கள். இதனால் யெகோவா இஸ்ரயேலரில் அதிக கோபங்கொண்டு தமது சமுகத்திலிருந்து அவர்களை அகற்றிவிட்டார். யூதா கோத்திரம் மட்டுமே மீதியாயிருந்தது. யூதாவுங்கூட தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் இஸ்ரயேலர் அறிமுகப்படுத்திய நடைமுறைகளைப் பின்பற்றினர். இதனால் யெகோவா இஸ்ரயேலர் அனைவரையும் வெறுத்துத் தள்ளினார். அவர்களை அவர் துன்பத்துக்குள்ளாக்கி, தமது சமுகத்திலிருந்து முழுவதுமாகத் துரத்துண்டு போகும்வரையும் கொள்ளையிடுபவர்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். தாவீதின் வம்சத்திலிருந்து யெகோவா இஸ்ரயேலரை அகற்றியதும், அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை தங்களுக்கு அரசனாக்கினார்கள். யெரொபெயாமோ இஸ்ரயேலை யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து வழிவிலகச் செய்து அவர்களைப் பெரும்பாவமொன்றைச் செய்யவும் தூண்டினான். இஸ்ரயேலர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களையும் தொடர்ந்து செய்தார்கள். அவற்றைவிட்டு விலகவில்லை. யெகோவா தமது பணியாளர்களான இறைவாக்கினர்மூலம் எச்சரித்திருந்தபடியே, அவர்களைத் தமது முன்னிருந்து நீக்கிப்போடும்வரை அவர்கள் இவற்றைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இன்றும் அங்கேயே இருக்கிறார்கள்.

2 இராஜாக்கள் 17:14-23 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்