1 சாமுவேல் 17:24-40

1 சாமுவேல் 17:24-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த வீரர்கள் அவனிடம், “அவனைக் கொல்பவனுக்கு இவ்விதமாகவே செய்யப்படும்” என்று சொல்லி, முன்பு சொன்னவற்றையே மறுபடியும் சொன்னார்கள். தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான். அதற்கு தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்துவிட்டேன்? நான் பேசவும் கூடாதா?” என்று கேட்டான். பின்பு தாவீது அவனைவிட்டுச் சென்று வேறொருவனிடம் அதே கேள்வியைக் கேட்டான். முன் சொல்லப்பட்ட பதிலையே அவனும் சொன்னான். தாவீது சொன்னவற்றைக் கேட்டவர்கள் சவுலுக்கு அதை அறிவித்தார்கள். சவுல் தாவீதை அழைத்தான். அப்பொழுது தாவீது சவுலிடம், “அந்தப் பெலிஸ்தியனான கோலியாத்தைக் கண்டு ஒருவரும் கலங்கவேண்டாம். உமது அடியவனாகிய நான் போய் அவனோடு சண்டையிடுவேன்” என்றான். அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனுக்கு எதிராய் போய், சண்டையிட உன்னால் முடியாது. நீயோ ஒரு சிறுவன். அவனோ இளமை முதல் போர் வீரனாய் இருக்கிறான்” என்றான். அதற்கு தாவீது சவுலிடம், “உமது ஊழியன் என் தகப்பனின் செம்மறியாட்டு மந்தையை மேய்ப்பவன். ஒரு சிங்கமோ, கரடியோ வந்து மந்தையிலிலுள்ள ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக்கொண்டு போகும்போதெல்லாம், நான் அவற்றைப் பின்தொடர்ந்து போய் அதை அடித்து அதன் வாய்க்குள் இருந்த செம்மறியாட்டை விடுவித்திருக்கிறேன். அது என்மேல் பாய்ந்தபோதும் அதன் தாடியைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறேன். இவ்வாறு உமது அடியவனாகிய நான் சிங்கத்தையும், கரடியையும் கொன்றிருக்கிறேன். இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனும் அவற்றின் ஒன்றைப்போல் எனக்கிருப்பான். ஏனெனில் அவன் வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறான்” என்றான். மேலும் தாவீது, “சிங்கத்தின் பிடியிலிருந்தும், கரடியின் பிடியிலிருந்தும் என்னை விடுவித்த யெகோவா, இந்தப் பெலிஸ்தியனின் கையிலிருந்தும் என்னை விடுவிப்பார்” என்றான். எனவே சவுல், “நீ போ. யெகோவா உன்னோடுகூட இருப்பாராக” என்று தாவீதுக்குச் சொன்னான். பின்பு சவுல் தன் இராணுவ சீருடைகளை தாவீதுக்கு உடுத்துவித்தான். தன் போர்கவசத்தையும், வெண்கல தலைக்கவசத்தையும் அணிவித்தான். தாவீதோ சவுலின் வாளைத் தன் யுத்த உடையின்மேல் கட்டிக்கொண்டு, ஆயுதம் தரித்துப் பழக்கமில்லாதபடியால் சுத்தி நடக்க முயன்றான். அதனால் அவன் சவுலிடம், “இவற்றுடன் என்னால் போகமுடியாது. ஏனெனில் எனக்கு இவை பழக்கமில்லை” என்று சொல்லி அவற்றைக் கழற்றினான். பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான்.

1 சாமுவேல் 17:24-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள். அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள். அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான். அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு காரணம் இல்லையா என்று சொல்லி, அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள். தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான். தாவீது சவுலை பார்த்து: இவனால் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்செய்வேன் என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, யெகோவா உன்னுடன் இருப்பாராக என்றான். சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான். அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான்.

1 சாமுவேல் 17:24-40 பரிசுத்த பைபிள் (TAERV)

அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும், மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் ராஜா அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது குமாரத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள். தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான். தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான். அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள். தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான். “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான். ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான். சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை. தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.

1 சாமுவேல் 17:24-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள். அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான். அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள். தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான். தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.