1 சாமுயேல் 17:24-40

1 சாமுயேல் 17:24-40 TCV

இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த வீரர்கள் அவனிடம், “அவனைக் கொல்பவனுக்கு இவ்விதமாகவே செய்யப்படும்” என்று சொல்லி, முன்பு சொன்னவற்றையே மறுபடியும் சொன்னார்கள். தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான். அதற்கு தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்துவிட்டேன்? நான் பேசவும் கூடாதா?” என்று கேட்டான். பின்பு தாவீது அவனைவிட்டுச் சென்று வேறொருவனிடம் அதே கேள்வியைக் கேட்டான். முன் சொல்லப்பட்ட பதிலையே அவனும் சொன்னான். தாவீது சொன்னவற்றைக் கேட்டவர்கள் சவுலுக்கு அதை அறிவித்தார்கள். சவுல் தாவீதை அழைத்தான். அப்பொழுது தாவீது சவுலிடம், “அந்தப் பெலிஸ்தியனான கோலியாத்தைக் கண்டு ஒருவரும் கலங்கவேண்டாம். உமது அடியவனாகிய நான் போய் அவனோடு சண்டையிடுவேன்” என்றான். அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனுக்கு எதிராய் போய், சண்டையிட உன்னால் முடியாது. நீயோ ஒரு சிறுவன். அவனோ இளமை முதல் போர் வீரனாய் இருக்கிறான்” என்றான். அதற்கு தாவீது சவுலிடம், “உமது ஊழியன் என் தகப்பனின் செம்மறியாட்டு மந்தையை மேய்ப்பவன். ஒரு சிங்கமோ, கரடியோ வந்து மந்தையிலிலுள்ள ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக்கொண்டு போகும்போதெல்லாம், நான் அவற்றைப் பின்தொடர்ந்து போய் அதை அடித்து அதன் வாய்க்குள் இருந்த செம்மறியாட்டை விடுவித்திருக்கிறேன். அது என்மேல் பாய்ந்தபோதும் அதன் தாடியைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறேன். இவ்வாறு உமது அடியவனாகிய நான் சிங்கத்தையும், கரடியையும் கொன்றிருக்கிறேன். இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனும் அவற்றின் ஒன்றைப்போல் எனக்கிருப்பான். ஏனெனில் அவன் வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறான்” என்றான். மேலும் தாவீது, “சிங்கத்தின் பிடியிலிருந்தும், கரடியின் பிடியிலிருந்தும் என்னை விடுவித்த யெகோவா, இந்தப் பெலிஸ்தியனின் கையிலிருந்தும் என்னை விடுவிப்பார்” என்றான். எனவே சவுல், “நீ போ. யெகோவா உன்னோடுகூட இருப்பாராக” என்று தாவீதுக்குச் சொன்னான். பின்பு சவுல் தன் இராணுவ சீருடைகளை தாவீதுக்கு உடுத்துவித்தான். தன் போர்கவசத்தையும், வெண்கல தலைக்கவசத்தையும் அணிவித்தான். தாவீதோ சவுலின் வாளைத் தன் யுத்த உடையின்மேல் கட்டிக்கொண்டு, ஆயுதம் தரித்துப் பழக்கமில்லாதபடியால் சுத்தி நடக்க முயன்றான். அதனால் அவன் சவுலிடம், “இவற்றுடன் என்னால் போகமுடியாது. ஏனெனில் எனக்கு இவை பழக்கமில்லை” என்று சொல்லி அவற்றைக் கழற்றினான். பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான்.

1 சாமுயேல் 17:24-40 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்