சாமுவேலின் முதலாம் புத்தகம் 17:24-40

சாமுவேலின் முதலாம் புத்தகம் 17:24-40 TAERV

அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும், மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் ராஜா அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது குமாரத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள். தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான். தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான். அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள். தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான். “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான். ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான். சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை. தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.

சாமுவேலின் முதலாம் புத்தகம் 17:24-40 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்