1 சாமுவேல் 14:24-30

1 சாமுவேல் 14:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்றையதினம் இஸ்ரயேலரை உபவாசம் இருக்கும்படி சவுல் கட்டளையிட்டதினால், அவர்கள் கஷ்டத்துக்குள்ளானார்கள். அப்பொழுது சவுல் அவர்களிடம், “நான் என் பகைவரைப் பழிவாங்க முன்பு எவன் மாலைவரை பொறுத்திராமல் சாப்பிடுகிறானோ அவன் சபிக்கப்படுவான்” என்று ஆணையிட்டுக் கட்டளையிட்டிருந்தான். எனவே வீரர்களில் யாரும் உணவைச் சாப்பிடவில்லை. போர்வீரர்கள் அனைவரும் காட்டுக்குப் போனபோது, அங்கே தரையில் தேன் இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் காட்டுக்குள் வந்தபோது தேன் ஒழுகிக்கொண்டிருந்தும் சவுலின் ஆணைக்குப் பயந்ததினால் ஒருவரும் தங்கள் கைகளால் தேனைத் தொட்டு வாய்க்குள் வைக்கவில்லை. யோனத்தானோ தன் தகப்பன் யுத்த வீரருக்கு ஆணையிட்டு மக்களைக் கட்டுப்படுத்தியிருந்ததை அறியவில்லை. அதனால் அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேனில் தோய்த்து அதிலிருந்து வழிந்த தேனைத் தன் கையில் எடுத்து வாய்க்குள் வைத்தான். உடனே அவன் பெலனடைந்தான். அப்பொழுது போர்வீரரில் ஒருவன் அவனிடம், “இன்று உணவு சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என உம் தகப்பன் ஒரு கடும் ஆணையிட்டு வீரர்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். இதனால்தான் போர்வீரர் பசியினால் சோர்ந்து இருக்கிறார்கள்” என்றான். இதைக் கேட்ட யோனத்தான் அவனிடம், “என் தகப்பனார் நாட்டிற்கு எப்படிப்பட்ட கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சிறிது தேனை சாப்பிட்டதால் நான் எவ்வளவு பெலனடைந்திருக்கிறேன். இன்றைய தினம் தங்களுக்கு அகப்பட்ட பகைவர்களின் கொள்ளைப்பொருட்களில் சிலவற்றைச் சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். பெலிஸ்தியரில் கொலையுண்டோர் இன்னும் அதிகமானோராய் இருந்திருப்பார்களே” என்றான்.

1 சாமுவேல் 14:24-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலர்கள் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் எதிரிகளை பழிவாங்கவேண்டும், மாலைவரைக்கும் பொறுக்காமல் எவன் சாப்பிடுகிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் மக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், மக்களில் ஒருவரும் கொஞ்சம்கூட சாப்பிடாதிருந்தார்கள். எல்லா இராணுவ மக்கள் எல்லோரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே நிலத்திலே தேன் கூடு கட்டியிருந்தது. மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். யோனத்தான் தன் தகப்பன் மக்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டான்; அதினால் அவனுடைய கண்கள் தெளிந்தது. அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் மக்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகவே மக்கள் களைத்திருக்கிறார்கள் என்றான். அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் மக்களைக் கலங்கச்செய்தார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததில், என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

1 சாமுவேல் 14:24-30 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர். சிலர் போர் செய்த வண்ணம் காட்டுப் பகுதிக்குப் போனபோது தேன் கூடுகளைக் கண்டும் ஆணைக்குப் பயந்து உண்ணவில்லை. ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான். ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால்தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான். யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்! பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.

1 சாமுவேல் 14:24-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள். தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது. ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது. அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான். அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.