1 சாமுயேல் 14:24-30

1 சாமுயேல் 14:24-30 TCV

அன்றையதினம் இஸ்ரயேலரை உபவாசம் இருக்கும்படி சவுல் கட்டளையிட்டதினால், அவர்கள் கஷ்டத்துக்குள்ளானார்கள். அப்பொழுது சவுல் அவர்களிடம், “நான் என் பகைவரைப் பழிவாங்க முன்பு எவன் மாலைவரை பொறுத்திராமல் சாப்பிடுகிறானோ அவன் சபிக்கப்படுவான்” என்று ஆணையிட்டுக் கட்டளையிட்டிருந்தான். எனவே வீரர்களில் யாரும் உணவைச் சாப்பிடவில்லை. போர்வீரர்கள் அனைவரும் காட்டுக்குப் போனபோது, அங்கே தரையில் தேன் இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் காட்டுக்குள் வந்தபோது தேன் ஒழுகிக்கொண்டிருந்தும் சவுலின் ஆணைக்குப் பயந்ததினால் ஒருவரும் தங்கள் கைகளால் தேனைத் தொட்டு வாய்க்குள் வைக்கவில்லை. யோனத்தானோ தன் தகப்பன் யுத்த வீரருக்கு ஆணையிட்டு மக்களைக் கட்டுப்படுத்தியிருந்ததை அறியவில்லை. அதனால் அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேனில் தோய்த்து அதிலிருந்து வழிந்த தேனைத் தன் கையில் எடுத்து வாய்க்குள் வைத்தான். உடனே அவன் பெலனடைந்தான். அப்பொழுது போர்வீரரில் ஒருவன் அவனிடம், “இன்று உணவு சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என உம் தகப்பன் ஒரு கடும் ஆணையிட்டு வீரர்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். இதனால்தான் போர்வீரர் பசியினால் சோர்ந்து இருக்கிறார்கள்” என்றான். இதைக் கேட்ட யோனத்தான் அவனிடம், “என் தகப்பனார் நாட்டிற்கு எப்படிப்பட்ட கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சிறிது தேனை சாப்பிட்டதால் நான் எவ்வளவு பெலனடைந்திருக்கிறேன். இன்றைய தினம் தங்களுக்கு அகப்பட்ட பகைவர்களின் கொள்ளைப்பொருட்களில் சிலவற்றைச் சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். பெலிஸ்தியரில் கொலையுண்டோர் இன்னும் அதிகமானோராய் இருந்திருப்பார்களே” என்றான்.